பாகற்காய் பார்த்து 10 அடி தூரம் தள்ளி நிற்பர்வர் கூட விரும்பி சாப்பிடுவார்கள்! ருசியான செட்டிநாடு பாகற்காய் புளிக்குழம்பு!

Summary: தமிழ்நாட்டு உணவு முறைகளில் செட்டிநாடு சமையலுக்கு என தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் செட்டிநாடு ஸ்டைலில் சுவையான பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. பாகற்காய் பலருக்கும் பிடிக்காத காயாக கருதப்படக் கூடிய ஒன்று. பாகற்காய் என்றாலே பெரும்பாலும் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் ஒரு முறை பாகற்காயை இப்படி குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு யாரும் பாகற்காயை ஒதுக்க மாட்டார்கள்.

Ingredients:

  • 1 பெரிய பாகற்காய்
  • புளி சிறிதளவு
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 3 தக்காளி
  • 3 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சோம்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பாகற்காயை உங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவில் நறுக்கி அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. புளியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, மல்லி, சோம்பு சேர்த்து வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  4. இவை ஆறியவுடன் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, ஜீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  6. இதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அதனோடு பாகற்காயை சேர்த்து வதக்கவும்.
  8. பாகற்காய் நன்கு வதங்கிய பின் அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  9. குழம்பு கொதிக்கும் போது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  10. குழம்பு கொதித்து சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து இறுதியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  11. அவ்வளவுதான் சுவையான பாகற்காய் புளிக்குழம்பு தயார்.