சிதம்பரம் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி ?

Summary: நாம் இன்றய சமையல் குறிப்பு பகுதியில் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதைத்தான் பார்க்க போகிறோம். பெரும்பாலான வீட்டில் வாரத்தில் ஒரு முறை தான் அசைவம் செய்வோம். மற்ற நாட்களில் சைவம் தான். அதிலும் தினமும் சாம்பார், புளிக்குழம்பு, இதுமாதிரிதான் வைப்பார்கள். தினமும் வித்தியாசமாக சமைக்கலாம் என்று யோசிப்போம் அல்லவா! அப்படி யோசிக்கும் போது வீட்டில் காய்கறிகளே இல்லையா கத்திரிக்காய் மட்டும் தான் இருக்கா அப்பொழுது கத்திரிக்காயை வைத்து சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்யலாம்.

Ingredients:

  • 9 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 3 டீஸ்பூன் வேர்க்கடலை
  • 3 டீஸ்பூன் வெள்ளை எள்
  • 5 டீஸ்பூன் தனியா
  • ½ கிலோ கத்திரிக்காய்
  • ½ மூடி தேங்காய் துருவல்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 5 தக்காளி
  • 18 பல் பூண்டு
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1½ டீஸ்பூன் தனியா தூள்
  • 1½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயம்
  • 75 கிராம் புளி
  • 50 வெல்லம்
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைக்க முதலில் மசாலாவை தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
  2. அதற்கு முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும். பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காயவிடவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம் சேர்த்து வறுபட்டவுடன், கடலைப்பருப்பு, வெள்ளை எள், வேர்க்கடலை, மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும்.
  4. நன்கு பொரிந்தவுடன் இதில் 4 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து கலந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  5. நன்கு ஆறிய பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  6. அடுத்து தக்காளியை மிக்சில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். மற்றும் புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காயவிடவும்.
  8. இதில் பகுதியாக நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு ஒரு 15 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
  9. பின்னர் கத்திரிக்காயை எண்ணெயிலிருந்து வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பிறகு அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய், போட்டு வறுக்கவும்.
  10. அடுத்து அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், பூண்டு சேர்த்து வதக்கவும், பூண்டு பொன்னிறமாக மாறியவுடன், அதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும், கூடவே கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
  11. நன்கு வதங்கிய பின், அதில் அரைத்து வைத்த தக்காளியை ஊற்றவும். இதில் மஞ்சள் தூள், தனியா தூள், மற்றும் மிளகாய் தூள், சேர்த்து வதக்கவும்.
  12. பின்னர் அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
  13. இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  14. அதன் பின் வதக்கிய கத்திரிக்காயை இதில் சேர்க்கவும். மேலும் இதில் பெருங்காயம் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.
  15. நன்கு கொதித்த பின் தேவைப்பட்டால் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி விடவும்.
  16. இப்பொழுது அருமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.