சுவையான முடகத்தான் கீரை சாதம் வீட்டில் இப்படி செஞ்சி பாருங்கள்! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!

Summary: கீரையின் பயன்கள் பற்றி நமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. கண் பார்வைக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது கீரைதான். மிக எளிதாக நம் வீட்டுப் பக்கத்தில், காய்கறிக் கடையில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கீரையைப் பெற முடியும். கீரை உணவுகள் சத்தானது மட்டுமல்ல, டேஸ்டானதும் கூட. கீரையை கூட்டாகவோ, ரசமாகவோ செய்து பயன்படுத்த முடியும். அதேபோல கீரை சாதமாகவும் செய்து சாப்பிடலாம். கீரை சாதம் அல்லது க்ரீன் ரைஸ் என்றதுமே, பலரும் புதினா சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது வெந்தயக்கீரை சாதம் செய்துவிடுவார்கள். இந்த மூன்றைவிட முடக்கத்தான் கீரையின் ருசி, குழந்தைகளின் நாவுக்கு ரொம்ப பிடிக்கும். தவிர, முடக்கத்தான் கீரை குடலுக்கும், இதயத்துக்கும் நல்லது.

Ingredients:

  • 1 கப் வேகவைத்த சாதம்
  • 1 கப் முடக்கத்தான் கீரை
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • புளி
  • 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கடுகு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் முடக்கத்தான் கீரையை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முடக்கத்தான் கீரை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  3. இவை அனைத்தையும் ஆற வைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  5. பின் இந்த அரைத்த விழுதை இதில் சேர்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும்.
  6. பின் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து பிறகு வடித்த சாதத்தை போட்டுக் கிளறி பரிமாறவும்.
  7. அவ்வளவுதான் சுவையான முடக்கத்தான் கீரை சாதம் தயார்.