என்ன டிபன் செய்தாலும் தொட்டு சாப்பிட ருசியான பன்னீர் பட்டர்‌ மசாலா இப்படி செஞ்சி பாருங்க!

Summary: நம்ம குழந்தைகளுக்கும், கணவருக்கும் சப்பாத்தி, தோசை-னா சட்னி, குருமா-னு தான் செஞ்சு கொடுத்து இருப்போம். கொஞ்சம் வித்தியாசமா அவங்களுக்கு பன்னீர் பட்டர் மசாலா செஞ்சு அசத்துவோம். இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பன்னீர். பன்னீரை பயன்படுத்தி பல வகையான உணவுகளை செய்யலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக அதில் செய்யப்படும் பன்னீர் பட்டர் மசாலா என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அசைவத்தை காட்டிலும் பன்னீரில் புரதசத்து அதிகம் உள்ளது. அவ்வளவு நல்லது உடம்புக்கு. சப்பாத்திக்கு குருமாவை விடவும் பன்னீர் பட்டர் மசாலாவை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு பன்னீர் சிக்கன் போன்றது.

Ingredients:

  • 200 கி பன்னீர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 6 முந்திரி பருப்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 2 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம்
  • உப்பு தேவையான அளவு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து ஊற வைத்த பன்னீரை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கினதும் அதனுடன் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. அதன்பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை, பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து கலந்து விடவும்.
  6. பிறகு மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
  7. குழம்பு நன்றாக கொதித்ததும் நாம் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து கஸ்தூரி மேதி மற்றும் பிரஸ் கிரீம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.