தீபாவளிக்கு ஸ்பெஷலாக வீட்டில் ரசமலாய் தித்திக்கும் சுவையில் இப்படி ஈஸியாக செஞ்சி பாருங்க!

Summary: ரசமலாய் பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது முற்றிலுமாக பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இனிப்புகளில் ரசகுல்லா விற்கு இனிப்பு பிரியர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதை விட ரசமலாய்க்கு பல மடங்கு மவுசு உண்டு. ரசகுல்லாவும் ரசமலாய்யும் ஏறத்தாழ ஒரே செய்முறையை கொண்டவைதான். ஆனால் சர்க்கரை தண்ணீருக்கு பதிலாக ரசமலாயை ராப்ரியில் ஊர விடுகிறார்கள். இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் உதயமானது என்று ஒரு சாராரும். இது ஒடிசாவில் உதயமானது என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். இவை இந்தியா மட்டுமின்றி வங்க தேசம் மற்றும் பாக்கிஸ்தானிலும் பிரபலமடைந்து இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசமலாய், வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.

Ingredients:

  • 1 லி பால்
  • 1 டீஸ்பூன் சோள மாவு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 கப் சர்க்கரை
  • 2 கப் தண்ணீர்
  • 1/2 லி பால்
  • 1/4 கப் கன்டென்ஸ்டு மில்க்
  • 1/4 கப் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி
  • 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 தட்டு

Steps:

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். பால் கொஞ்சம் சுண்டியதும் எலுமிச்சை சாறு ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.
  2. பின் பாலை ஒரு துணியால் வடிகட்டி அரைமணி நேரம் வரை அப்படியே வைத்து விடவும். இப்போது இது பன்னீராக மாறி விடும்.
  3. பன்னீரை எடுக்கும்பொழுது அதனை ஒரு முறை தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவும். இப்படி தண்ணீர் விட்டுக் கழுவினால் பன்னீரில் உள்ள எலுமிச்சை வாசம் நீங்கும்.
  4. அரைமணி நேரம் கழித்து பன்னீரை சோள மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  6. பின் நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை வைக்கவும்.
  7. மலாய் செய்ய மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி பால் பொங்கி வரும் சமயத்தில் குங்குமப்பூ, கண்டன்ஸ்டு மில்க், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
  8. சர்க்கரைப் பாகில் சேர்த்த பன்னீரை சிறிது நேரம் கழித்து எடுத்து பார்த்தால் நன்கு பெரிதாக ஊதி இருக்கும்.
  9. ஊறி இருக்கும் பன்னீர் மற்றும் சர்க்கரை பாகை வடிகட்டி பன்னீரை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. அதன்பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பன்னீரை சுமார் 1‌ மணி நேரம் மலாயில் ஊற வைக்கவும்.
  11. பிறகு இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேலே சிறிதளவு குங்குமப்பூவை தூவி பரிமாறவும்.
  12. அவ்வளவுதான் சுவையான மற்றும் இனிப்பான ரசமலாய் தயார்.